Latest News
தமிழர் தாயக மாவீரர் துயிலும் இல்லங்களில் வெளிநாட்டவர்கள்!
கண்ணீரால் கரைந்தது விசுவடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லம்
மதுரையில் நடந்த மாவீரர் நாள் பொதுக்கூட்டம் தமிழீழ தேசியக்கொடியும் பறக்கவிடப்பட்டது

Advertisement

பாமகவினர் கைது: வேதாந்தா நிறுவனத்தின் கூலிப்படையாக தமிழக அரசு செயல்படுகிறது; ராமதாஸ் குற்றச்சாட்டு
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக பரப்புரை செய்ததற்காக பாமகவினர் 24 பேரை காவல்துறை கைது செய்துள்ளதாக, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்ட பாமகவினர் 24 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடியதாக பொய்யான வழக்கும் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் பெரும் தீங்கை விளைவிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உலகின் பல நாடுகளில் மொத்தம் 90 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அவற்றின் தொடர்ச்சியாகவும் காவிரி பாசன மாவட்டங்களை சிதைத்து பாலைவனமாக்கும் நோக்குடன் செயல்படுத்தப்படவுள்ள 3 ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கைவிட வலியுறுத்தியும் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பரப்புரை செய்யப்பட்டது. ஹைட்ரோகார்பன் திட்டங்களால் ஏற்படும் தீமைகளை விளக்கும் இந்த பரப்புரையின் போது துண்டறிக்கை வழங்கப்பட்டதைத் தவிர வேறு எதுவும் செய்யப்படவில்லை.

ஆனால், நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபட்ட பாமகவின் மாநில துணைப் பொதுச்செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி, முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் அய்யப்பன். மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன் பால தண்டாயுதம் உள்ளிட்ட 24 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்கள் மீது பொது இடங்களில் ஐந்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்ததாகவும், கலைந்து செல்ல மறுத்ததாகவும் குற்றம்சாட்டி இந்திய தண்டனைச் சட்டத்தின் 151 ஆவது பிரிவில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோத செயல் மட்டுமின்றி, உரிமைக்குரலை அப்பட்டமாக ஒடுக்கும் முயற்சியும் ஆகும்.

காவிரி பாசன மாவட்டங்களில் சுமார் 200 இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறுகளைத் தோண்டி வைத்துள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கச்சா எண்ணெயைக் கொண்டு செல்வதற்காக பல இடங்களில் விளைநிலங்களைத் தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளிலும் ஏராளமான இடங்களில் குவாரிகள் அமைக்கப்பட்டு மணல் கொள்ளை அடிக்கப்படுகிறது.

அதேநேரத்தில் இரு ஆறுகளிலும் தடுப்பணைகளை கட்டும் திட்டத்தை செயல்படுத்த அரசு மறுக்கிறது. இத்தகைய சூழலில் ஹைட்ரோகார்பன் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாக மாறுவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்க வேண்டியது அங்கு வாழும் ஒவ்வொருவரின் கடமை ஆகும். அதைத் தான் கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களைச் சேர்ந்த பாமகவினரும் பசுமைத்தாயகம் அமைப்பினரும் செய்தார்கள்.

 அவர்களின் பணி பாராட்டப்பட வேண்டியதாகும். ஆனால், மத்திய அரசுக்கு கங்காணியாகவும், ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த உரிமம் பெற்றுள்ள வேதாந்தா போன்ற நிறுவனங்களின் கூலிப்படையாகவும் செயல்பட்டு வரும் தமிழக அரசு, இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் விழிப்புணர்வு பரப்புரை செய்தவர்களை கைது செய்து கொடுமைப்படுத்தியிருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு இதைவிட மிக மோசமான நம்பிக்கைத் துரோகத்தை எவராலும் இழைக்க முடியாது.

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வு துண்டறிக்கைகளை மக்களிடம் குழுவாக சென்று தான் வழங்க முடியும். அவ்வாறு கொடுத்ததற்காகத் தான் அவர்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின் 151 ஆவது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மைக்காலத்தில் இந்த சட்டப்பிரிவு வேறு எங்கும் பயன்படுத்தப்பட்டதாக நினைவில்லை.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராகத் தான் இந்த சட்டப்பிரிவு அதிக முறை ஏவப்பட்டது. இப்போது இந்த கொள்ளையர் ஆட்சியில் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக அறவழியில் பரப்புரை செய்த பாமகவினர் மீது 151 ஆவது சட்டப்பிரிவு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது தமிழக அரசுக்கு எதிராக நடப்பது இரண்டாம் விடுதலைப்போர் என்பதையே இது காட்டுகிறது.விளம்பரம்